தென்னாபிரிக்கா மண்ணில் இலங்கை வரலாற்று வெற்றி.
தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி, சரித்திர வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியதன் மூலம் இந்த வரலாற்று வெற்றியினை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.
இத்தொடரில் இதற்கு முன்னதாக டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், குசல் ஜனித் பெரேராவின் அபார துடுப்பாட்டத்தின் துணையுடன் இலங்கை அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவுசெய்தது.
இதனையடுத்து, வரலாற்று வெற்றியின் ஏக்கத்துடன் கடந்த 21ஆம் திகதி பேர்ட் எலிசெபத் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி களமிறங்கியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக குயிண்டன் டி கொக் 86 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் அதிகபட்சமாக விஸ்வ பெர்னான்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெறும் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அதிகபட்சமாக கார்கிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஒலிவியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
68 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் தென்னாபிரிக்கா அணி சார்பில், அணித்தலைவர் டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, குசல் மெண்டிஸ் மற்றும் ஒசேத பெர்னான்டோவின் 163 ஓட்டங்கள் இணைப்பட்டத்தின் துணையுடன் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் மகத்தான வெற்றியை பெற்றதோடு, தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வைத்து வயிட் வோஷ் செய்து வரலாற்று வெற்றியை முத்திரை பதித்தது.
இதன்போது இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும், ஒசேத பெர்னான்டோ 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கார்கிஸோ ரபாடா மற்றும் ஒலிவியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 110 பந்துகளில் 13 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் நாயகனாக இத்தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த குசல் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
பலம் வாய்ந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளே தென்னாபிரிக்காவுக்கு சென்று தோல்வியை தழுவிய நிலையில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி தென்னாபிரிக்கா மண்ணில் சாதித்திருப்பதானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல இன்றைய போட்டியில் பல சாதனைகளும் பதிவாகியது. இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட அதிகூடிய மூன்றாவது இணைப்பாட்டமாக, குசல் மெண்டிஸ் மற்றும் ஒசேட பெர்னான்டோ ஜோடியின் இணைப்பாட்டம் பதிவாகியது. இவர்கள் இருவரும் இணைந்து 163 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
மேலும் இலங்கை அணியின் சிறந்த ஆறாவது வெற்றிகரமான சேஸிங்காக இது பதிவாகியது. கடந்த 2017ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிராக 388 ஓட்டங்களை சேஸிங் செய்ததே முதல் சேஸிங பதிவாக உள்ளது.
இதுதவிர, தென்னாபிரிக்கா மண்ணில் அவுஸ்ரேலியா, இங்கிலாந்துக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அணியாக இலங்கை தனது பெயரை முத்திரை பதித்துக்கொண்டுள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆறாவது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு, இலங்கை பிரதமர், விளையாட்டு துறை அமைச்சர், முன்னாள் வீரர்களான குமார சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சர்வதேச வீரர்கள் என பலரும் சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.