மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் வசித்துவரும் முன்னாள் பேராளியான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு துணுக்காய் கிராம அலுவலகரினால் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக விசனம் வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த முன்னாள் போராளி வீட்டுத்திட்டம், வறட்சி நிவாரணத்தில் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிராம அலுவலருக்கு எதிராகவும் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு முறைப்பாடு மேற்கொண்டதால் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலாளர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் போராளி குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் நிறைவுற்ற பின்னர் சமூக மயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலருக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்துக்கள் உட்பட பல சலுகைகளையும் வழங்குவதாகத் தெரிவிக்கும் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவராலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமது வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும் உதவிகள் கொடுப்பனவுகள் சமுர்த்தி, வீட்டுத்திட்டம், வறட்சி நிவாரணம் போன்ற உதவிகளில் தங்களை முற்றாக புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வசதி வாய்ப்புக்களுடன் சமூகத்தில் உயர்ந்த இடங்களில் உள்ளவர்களுக்கு வறட்சி நிவாரணங்கள், வீட்டுத்திட்டங்கள் சமுர்த்தி ஏனைய சலுகைகளை வழங்கும் அரச அதிகாரிகள் முன்னாள் போராளிகளாக சமூகத்தில் இனங்காணப்பட்ட எமக்கு எவ்விதமான உதவிகளையும் முன்னுரிமைகளையும் எமது தாயகப் பகுதியில் வழங்க முன்வரவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதனால் முன்னாள் போராளிகள் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளினால் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து துணுக்காய் பிரதேச செயலாளர் ஆலங்குளம் பகுதி கிராம அலுவலகருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து தனக்கு பல்வேறு வழிகளில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு குறித்த முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைந்து கொண்ட எமக்கு கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வீட்டுத்திட்டங்கள், சமுர்த்திக் கொடுப்பனவுகள், வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதேச செயலாளர் கிராம அலவலகர் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பல்வேறு வசதிகளுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் வசித்துவரும் பலருக்கு வறட்சி நிவாரணம் உட்பட பல அரச சலுகைகளை வழங்கும் கிராம அலுவலகர் முன்னாள் போராளியான எமக்கு சிபாரிசு செய்யவில்லை.

பலதரப்பட்டவர்களிடம் முறையிட்டும் எவ்விதமான பதிலும் இன்று வரையிலும் எமக்குக் கிடைக்கவில்லை.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டபோதிலும் ஒரே ஒரு கிராம அலுவலகரான பெண்ணொருவருக்கு எவ்விதமான இடமாற்றமும் வழங்கப்படவில்லை.

தற்போது பிரதேச செயலாளர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் ஆனால் இடமாற்றம் பெற்றுச் செல்ல கிராம அலுவலகர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றார்.

இவ்வாறு பல்வேறு முறைப்பாடுகளுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இவ்விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net