வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு!
முல்லைத்தீவு – சாலை கடற்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து மீன்பிடி தொழில் மேற்கொள்வதை தடை செய்யுமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தவு மீன்பிடி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்று மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மீனவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தை சேர்ந்த 18 படகுகளுக்கு நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் கடந்த வருடம் தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மீனவர்களினால் சென்றவாரம் அறியப்பட்டுள்ளது.
குறித்த 18 மீனவப் படகுகள் அனுமதிகளும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் புத்தளம் உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் குறித்த அனுமதியின்படி அவர்கள் தமது மாவட்ட கடற்கரையில் இருந்து முல்லைத்தீவு ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியும்.
ஆனால் குறித்த வெளிமாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து அனுமதியின்றி சாலை கடற்கரைப்பகுதியில் கடற்கரையேறி வாடிகள் அமைத்துவருதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சாலைப்பகுதியில் கரையேறி தரித்து நிற்கும் வெளிமாவட்ட மீனவப்படகுகள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்றே முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் முல்லைத்தீவு மீன்பிடி சங்கங்களினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.