தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு முத்திரை!
தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ரத்கம பிரதேச வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் ஓர் கட்டமாக இந்த ஆயுத களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த ஆயுத களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் பயன்படுத்திய ரீ- 56 ரக துப்பாக்கிகள் இந்த ஆயுத களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆயுத களஞ்சியத்திற்கு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தகர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் சில நேற்றைய தினமும் வலஸ்முல்ல, மெதகம்கொட, கனுமல்தெனிய காட்டு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தென் மாகாண பொலிஸின் விசேட விசாரணை பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.