முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் விபத்து – ஒருவர் பலி மூவர் படுகாயம்!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்தே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறு காயங்களிற்குள்ளானவர்களிற்கு விபத்து இடம்பெற்ற பகுதியில் சிகிச்சைகள் இடம்பெற்றன.
குறித்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய ரிப்பர் வாகனத்தில், அதி வேகமாக பயணித்த குறித்த பேருந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சாரதி உதவியாளர் என அறியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியிலும் மாங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
குறித்த விபத்தில் சிக்கிய பயணிகள் கருத்து தெரிவிக்கையில்,
சாரதி வவுனியா பகுதியில் வைத்து மோசமாக பேருந்தை திருப்பியதை அவதானித்தேன். அதன் பின்னர் அவர்கள் பெரிய சத்தமாக சிரித்த கதைத்தனர். அதிக வேகமாக வாகனத்தை செலுத்தினர். அதன் பின்னர் நான் நித்திரையாகிவிட்டேன். பின்னர் இப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. நானும் காயமடைந்துள்ளேன். நித்திரை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றள்ளது என தெரிவிக்கின்றனர்.
குறித்த பேருந்து வீதியில் தரித்து நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதி வீதியின் மறு பக்கம் பயணித்து சிறு பற்றைக்குள் சென்றுள்ளது.
சாரதியின் கவனயீனம் மற்றும் நித்திரை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரின் விசாரணைககளில் தெரியவந்துள்ளது.