யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்கள்

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்களை இன்று முன்னால் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் உதயநகர் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அனந்தி சசிதரன் புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதி பங்களிப்பில் குறித்த நிவாரண பொருட்களை பகிர்ந்தளித்தார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

இன்று உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசினால் வழங்கப்படும் அரச உதவி தொகையோ வெறும் 20 ரூபா மா நேர உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அண்ணளவாக இலங்கை பெறுமதியில் 80 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த உழைக்கும் தருவாயில் உள்ளவர்களை தொலைத்துவிட்டு இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இன்றல்ல நேற்றல்ல பத்து ஆண்டுகள் தேடிக்கொண்டிருக்கின்றோம். காலத்தை நீடிப்பதற்காகவே அரசு முயற்சிக்கின்றது.

வழங்கப்பட்ட கால அவகாசத்தில் ஓஎம்பி அலுவலகம் அமைத்து காணாமல் போன ஒரு நபரைகூட கண்டு பிடிக்க முடியாது போனது. இன்று மீண்டும் கால அவகாசத்திற்காக முயற்சிக்கின்றது.

இவ்வாறான சூழலை விளங்கிக்கொண்டும் எமது தலமைகள் மௌனமாக உள்ளனர். சம்பந்தன் அவர்கள் காணாமல்போன விடயம், யுத்த குற்றங்கள் தொடர்பில் பேசாமல் தமது விடயங்களையே பேசுகின்றனர்.

இன்று சிங்கள ஆட்சியாளர்கள் ஆட்சி செய்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆட்சி செய்கின்றனர். ஜனநாயகத்தை பாதுகாத்தோம் என தெரிவித்துக்கொண்டு இருக்கும் இவர்களால் என்னத்தை இதுவரை செய்ய முடிந்தது.

இப்போது மேடைகளில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. நாம் ஏமாறும் தருவாயில் உள்ளோம் என கூறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்களால் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தத்தை கொடுக்க முடியும்.

இவர்கள் அனைவரும் இணைந்து இவ் விடயங்களை செய்யாவிட்டால் நாம் ஆதரவு தரமாட்டோம் என தெரிவித்தால் அரசு அச்சமடையும். அவர்களை ஒரு இறுக்கமான சூழலிற்குள் தள்ளலாம்.

சர்வதேசத்திற்கும் இதனை தெரிவிக்கலாம். அதை விடுத்து அந்த நாட்டை பகைக்காதீர்கள்! இந்தநாட்டை பகைக்காதீர்கள்! என சொல்வதற்கு இவர்கள் யார்.

உண்மையில் இரட்டா பிரயா உரிமை கொண்ட பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருக்கமுடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

அவ்வாறு குற்றவாளி கூண்டில் நிறுத்த முடியாதவர்கள் எமக்கு உதவுவது போன்று காட்டிக்கொள்ள முனைவதாகவும் அனந்தி சசிதரன் இன்றைய நிகழ்வில் சுட்டிக்காட்டியிருந்தார்.

Copyright © 4507 Mukadu · All rights reserved · designed by Speed IT net