வடக்கின் வேலையற்ற பட்டதாரிகளின் சரியான புள்ளி விபரங்கள் சேகரிப்பு.
வடக்கு மாகாணத்தில் உள்ள வேலை தேடும் பட்டதாரிகளின் சரியான புள்ளி விவரங்களை பெறுவதற்கு அவர்களின் விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் பட்டதாரிகள் சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண வேலைதேடும் பட்டதாரிகள் சமூகத்தினர் வடக்கு மாகாண ஆளுநருடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் பட்டதாரிகளின் சரியான எண்ணிக்கையை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த தகவல் திரட்டப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் இருந்து தற்போது வரை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலை தேடிய பட்டதாரிகள் அரச நியமனங்களைப் பெற்றுள்ளார்கள்.
இதனால் தற்போது வேலைதேடும் பட்டதாரிகளின் விவரங்களை பெறவேண்டியுள்ளது. எனவே பட்டதாரிகள் தங்கள் பட்டச் சான்றிதழ் பிரதிகளை ஒப்படைப்பதன் மூலம் இந்த விவரங்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நேற்றுமுன்தினம் முற்பகல் 9.30 தொடக்கம் 4.30 மணிவரை விவரங்களை சேகரிக்கும் பணியில் வடக்கு மாகாண வேலைதேடும் பட்டதாரிகள் சமூகத்தினர் ஈடுபட்டனர்.