இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அதிருப்தி!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் பதற்ற நிலைமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் சகல முனைப்புக்களுக்கும் ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்கைளின் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்பி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அதற்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்த பிராந்திய வலயத்தின் பாதுகாப்பினையும் சமாதானத்தையும் உறுதி செய்யும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
மூன்று தசாப்தங்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடு என்ற ரீதியில் காஷ்மீர் புல்வாமாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும், எந்த வகையிலான தீவிரவாதத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.