ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட. மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி உத்தரவை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இப்பேரணியில் குழப்பம் விளைவிக்க வந்த சிலரால், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் குறித்து வட.மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.ஊடக அமையத்தின் சார்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இம்முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட அவர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.