பசில் – கம்மன்பில மோதல்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில மற்றும் ஊடகவியலாளர்கள் இடையிலான கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஊடக சந்திப்பின் பின்னர், திங்கட் கிழமைகளில் பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கு ஏன் வருவதில்லை என உதய கம்மன்பில தனக்கு நெருக்கமான செய்தியாளர்களிடம் கேட்டுள்ளார்.
திங்கட் கிழமைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தி சேகரிப்பதால், வர முடியவில்லை என செய்தியாளர்கள் பதிலளித்துள்ளனர்.
தனக்கு எதிரான நடவடிக்கையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திங்கட் கிழமைகளில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதாகவும் இது பசில் ராஜபக்ச தந்திரம் எனவும் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
திங்கட் கிழமை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதன் மூலம் தனது ஊடகவியலாளர் சந்திப்பை படிப்படியாக மழுங்கடித்து விடலாம் என பசில் ராஜபக்ச கணக்கிட்டிருப்பார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கும் உதய கம்மன்பில ஆகியோர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பசில் ராஜபக்ச, ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.