உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்!
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார்.
இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்திருந்தார்.
இந்நிலையில், அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அவரைச் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைய வயோதிபர், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.
எனினும் அவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போதும் சந்தேகநபர்கள் பற்றிய விவரத்தைக் கூறவில்லை. அத்துடன், மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தார்.
அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் எவரும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அதனால் அவரை நீதிமன்றப் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பி.போல், அவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.