கிளிநொச்சி கொலை: சந்தேக நபரை நாளை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை!
கிளிநொச்சி உதய நகர் பகுதியில் காப்புறுதி நிறுவனப்பணியாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை(08-03-2019) வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைமேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி வான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் கடந்த (05-03-2019) செவ்வாய்க்கிழமை காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார்.
தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை அவரது உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். என்றும் தெரியவந்தது. இதனையடுத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று(07-03-2019) பகல் குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதிமன்ற நீதிவான் மா. கனேசராஜா அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபரை நாளை(08-03-2019) வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைமேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.