வடக்கிற்கான விஜயம் என்பதால் மஹிந்தவை சந்திக்கவில்லை!
நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் வடக்கிற்கான பயணத்துடன் தொடர்புடையது என்பதால் அவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவில்லை என நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவில்லை என்று, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே நோர்வே தூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுமார் 7 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கவும், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளைப் பார்வையிடவுமே குறுகிய பயணமாக, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அவரது வருகை, வடக்கிற்கான பயணத்துடன் தொடர்புடையது, அவரது நிகழ்ச்சி நிரல் மிகவும் இறுக்கமானதாக இருந்தது.
இதன்காரணமாகவே பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சரைத் தவிர எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்திக்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.