விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன!

விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன!

நாட்டில் மீதமுள்ள 28 சத வீத அடர்ந்த காடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக அந்த காடுகள் பாதுகாக்கப்பட்டதாகவும் போர் நடக்காத ஏனைய பகுதிகளில் உள்ள காடுகளை அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் இணைந்து அழித்து விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வனங்கள், மரம்,செடி, கொடிகளை பாதுகாக்க அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து பிரஜைகளும் கடமைப்பட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்க தற்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காடுகளின் அடர்த்திகளை அதிகரிக்க விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

திம்புலாகல வெஹெரகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச காடுகள் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

காடுகளின் அடர்த்தியை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை எனில் இன்னும் 15 ஆண்டுகளில் காடுகள் அழிந்து போகும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின் ஒரு லட்சத்து 48 ஹெக்டேயர் காடு புதிதாக உருவாக்கப்பட வேண்டும். வருடாந்தம் 15 ஆயிரம் ஹெக்டேயரில் மரங்களை நட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net