புலிகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரிற்கு என்ன ஆனது?

புலிகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரிற்கு என்ன ஆனது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி பலியான நூற்றுக்கணக்கான இலங்கையின் இராணுவத்தினரின் சடலங்களை இலங்கை அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளிக்க முயற்சித்தபோது அவற்றில் சிதைந்து போன சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் மறுத்தது என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக 20 அல்லது 50 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘மாதாந்தம் 06 ஆயிரம் ரூபா எனும் உதவித் தொகையானது பிச்சைக் காசு போன்றதாகும்.

வடக்கு மாகாணத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, இவர்களுக்கு 06 மாதங்களுக்கு வழங்கவே போதுமானதல்ல என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

நாட்டில் ஜே.வி.பி.யின் பிரச்சினை நடைபெற்ற காலத்தில், அப்போதைய அரசாங்கம் கடத்திக் காணாமல் செய்யப்பட்டோரும், காணாமல் போனோர் பட்டியலுக்குள் அடங்கப் போகின்றனர்.

மேலும், இராணுவத்திலிருந்த ஒரு தொகையானோரும் காணாமல் போனோர் பட்டியலுக்குள் சேர்க்கப்படுவர்.

இராணுவத்தினரின் ஆணையிரவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாம்கள், விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பலியானார்கள்.

அவ்வாறு பலியானவர்களின் சடலங்களை, இலங்கை அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளிக்க முயற்சித்த போது, அவற்றில் சிதைந்து போன சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு, அரசாங்கம் மறுத்தது.

இதனையடுத்து இராணுவத்தினரின் உடல்களை எரிப்பதற்கான அனுமதியை அப்போதைய அரச அதிபர் பெற்றுக்கொண்டமைக்கு அமைய, அவை எரியூட்டப்பட்டன.

இவ்வாறு யுத்தத்தில் பலியாகி பொறுப்பேற்கப்படாத சடலங்களுக்குரிய இராணுவத்தினரின் பெயர்களும், காணாமல் போனோர் பட்டியலுக்குள்தான் உள்ளடங்கப் போகின்றது.

நாட்டில் வாழ்க்கைச் செலவு உச்சத்தில் உள்ள நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ள மாதாந்த உதவு தொகையான 06 ஆயிரம் ரூபாவானது அற்பமானதாகும்.

காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. ஆனால், காணாமல்போன ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவுவதாக சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொள்வதற்காகவே, 06 ஆயிரம் ரூபா எனும் சிறுதொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஆனால், இந்தப் ‘பிச்சைக் காசு’ எமக்குத் தேவையில்லை. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் வரை, அவ்வாறானாவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக, ஆகக் குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net