பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமது நியாயமான உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படையிலான கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பிப் போராடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக, ஜனநாயக விரும்பிகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் பாதுகாத்து வருவதாக உரத்துக் கூறிக்கொண்டே பிரதமர் ரணில் தலைமையிலான இன்றைய அரசாங்கம் மிக மோசமான காட்டுச் சட்டமாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன் நிற்கிறது.
பொலிஸாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன.
தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கி, நீதி நியாயம் கேட்கும் எவரையும் இச்சட்டத்தின் மூலம் இருபது வருடச் சிறைத்தண்டனை வரை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இச்சட்டமூலத்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து எதிர்த்து, அதனை மீளப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டும்” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.