கிழக்கில் இரண்டு புதிய கல்வி வலயங்களுக்கு அங்கீகாரம்.
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகின்றது.
மிகவும் பின்தங்கிய, பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து பொத்துவிலிலும், உஹண பிரதேசத்தினை அம்பாறை கல்வி வலயத்தில் இருந்து பிரித்து உஹணையிலும் கல்வி வலயத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆளுநரின் திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிழக்கு மாகாணத்தில் புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்திலே 17 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இவை ஆளுநரின் அங்கீகாரத்தோடு 19 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் கல்வியில் பின் தங்கிய பிரதேசங்களில் மாற்றத்தினை கொண்டுவர முடியும். மேலும் இவ்வலயங்கள் கல்வி வளர்ச்சியிலும் ஏனைய பௌதீக வளங்களைக் கட்டியெழுப்புவதிலும் உயர்வடையும்.
உஹண கல்வி வலயமானது எதிர்வரும் மே 2 ஆம் திகதி காலை 9 மணிக்கும், பொத்துவில் கல்வி வலயமானது மே 3 ஆம் திகதி காலை 9 மணிக்கும் ஆளுநரால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
இக்கல்வி வலயங்களுக்கான ஆளனி உத்தியோகத்தர்கள் ஆகியவற்றை உடனடியாக நியமிப்பதற்கும் மற்றும் அதற்கான கட்டடவேலைகள், தளபாடங்களை செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் முத்து பண்டா,மேலதிக செயலாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.