ஜெனீவா தீர்மானமும் இலங்கையின் மறுபக்கமும்!
தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஜெனீவாவில் முன்வைப்போம் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக மேலதிக கால அவகாசத்திற்கு தமிழ் தரப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
நடந்தது என்ன? 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை செயற்படுத்த, மூன்றாவது தடவையாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.
இலங்கை தொடர்பாக இம்முறை பிரித்தானியா, ஜேர்மன், மசடோனியா போன்ற நாடுகள் கொண்டுவந்த 40/எல்/1 என்ற பிரேரணை எவ்வித வாக்கெடுப்போ திருத்தமோ இன்றி நிறைவேற்றப்பட்டதை அனைவரும் அறிவர்.
வழமைபோன்று அதற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை, பிரேரணையின் பெரும்பாலான உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுதலித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு நீதிபதிகள் தலையீடு போன்ற விடயங்களை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு அப்பால் சென்று நிறைவேற்ற முடியாதென, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா.வில் தெளிவாக கூறிவிட்டார்.
புதிய இணை அனுசரணை வழங்கிவிட்டு முக்கியமான விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை கூறுகின்றது. அப்படியாயின் கடந்த காலங்களில் காணப்பட்ட மந்த நிலையும் இழுத்தடிப்பும் இனிவரும் 2 வருட கால அவகாசத்திலும் காணப்படுமா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பிடம் வலுப்பெற்றுள்ளது.
அரசாங்கம் உறுதியளித்த விடயங்களை செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜெனீவா சென்றிருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘எதிர்த்து கெடுக்க முடியாவிட்டால் அடுத்து கெடுக்க வேண்டும்’ என்பதற்கிணங்க இலங்கை செயற்பட்டுள்ளதென்றும், இது தற்காலிக வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இணை அனுசரணை வழங்குவதைப் போல வழங்கிவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எதனையும் செய்யாமல் விடுவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலும் அற்றுப்போயுள்ளமை புலனாகின்றது.
இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடும் அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு இல்லாத நிலையில், இவ்விடயத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென ஜெனீவாவில் கருத்துத் தெரிவித்திருந்த மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறு தீர்வின்றி பிரச்சினைகள் இழுபறி நிலையில் காணப்படுவது, நிலைத்த நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தன்னைத்தானே ஏமாற்றக்கூடாது. சர்வதேசத்திற்கு அன்றி பாதிக்கப்பட்ட தமது சொந்த நாட்டு பிரஜைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முழுமையாக செயற்படுத்துவதில் காணப்படும் கால தாமதங்கள், 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களில் மெதுவான நகர்வுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
மறுபுறம் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வு கிடைக்குமென அரசாங்கம் உறுதியளித்தது. அதற்குள் ஆட்சிமாறி, இன்றோ புதிய அரசியல் யாப்பானது இந்த ஆட்சியில் சாத்தியமில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம ஜெனீவாவில் கூறிவிட்டார்.
அவ்வாறாயின், இந்த புதிய பிரேரணையின் பிரதிபலிப்பு என்ன? இலங்கையின் கடந்தகால செயற்பாடுகளை அவதானித்தும் சில நாடுகள் முண்டுகொடுக்க முயற்சிக்கின்றனவா? அல்லது காலத்தை வீணக்கும் கைங்கரியத்தை இலங்கை செவ்வனே செய்கின்றதா?
எது எவ்வாறாக அமைந்தாலும், தற்போது மூன்றாவது தடவையாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இறுதி சந்தர்ப்பமாகக்கூட இது அமையலாம். இதற்குள் சாதகமான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் சந்தர்ப்பங்களை வீணடித்தால் இறுதியில் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பது உறுதி.
கலாவர்ஷ்னி கனகரட்ணம்