காணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது!
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தங்களது காணி விடுவிப்பை வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதி மக்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
எனினும், அந்த மக்கள் கோரிவரும் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் வருகின்றதா என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
2017 ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட 203/10ம் இலக்க வர்த்தமானியில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கான பிரதேசங்கள் எவை என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது அவை மாற்றியமைக்கப்பட்டு, கேப்பாப்புலவு பகுதி மக்களின் காணிகளை விடுவிக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், குறித்த விடயங்களை ஆராய்ந்து அந்த பகுதி மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்