தொடரும் வெப்பமான காலநிலை – மக்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதிக வெப்பமான வானிலை காரணமாக உடற்சோர்வு, களைப்பு மற்றும் தோல் நோய் என்பன ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக போதியளவு நீரை பருகுமாறும் நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நுரைச்சோலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சமீப காலமாக நாட்டில் மின்சார தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேநேரம் தொடர்ந்தும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.