வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள்!

வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள்!

தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம் , கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டு உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வாறாக நாம் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார்.

நேற்று 26 காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆளுநருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் நிர்வாகிகளை நேற்று மாலை சந்தித்த ஆளுநர் இந்நிலையம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகளின் சமூக மேம்பாட்டுக்கு எவ்வித தன்நலனும் இல்லாமல் இந்நிலையம் மேற்கொண்டுவரும் சமூகப் பணிக்கு உறுதுணை வழங்குவதாக உறுதியளித்ததுடன், முதற்கட்டமாக கருவி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தின் அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை உடனடியாக கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

அத்தோடு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நிதியுதவியுடன் இந்நிலையத்தின் உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை தமது நிறுவனத்தின் அலுவலகமொன்றினை அமைப்பதற்கு நிரந்தர இடமொன்றினை யாழ் நகருக்கு அண்மையில் பெற்றுத்தருமாறும் அது மாற்றுத்திறனாளிகள் இலகுவில் வந்துபோவதற்கு வசதியான ஒரு இடத்தில் இருப்பதனை உறுதிப்படுத்துமாறும் அதற்கான பணத்தினை தாமே தமது நிலையத்தினூடாக வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கருவி நிலையத்தின் நிர்வாகிகள் ஆளுநரை கேட்டுக்கொண்டதுடன், மிக விரைவில் பொருத்தமான இடத்தில் அதனையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது தொழிற்சாலையினை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியின் ஒரு பகுதியினை இன்னுமொருவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்துள்ளதன் காரணமாக நிரந்தர தொழிற்சாலையொன்றினை அமைக்க முடியாயாமல் இருக்கும் பிரச்சினை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்த கருவி நிர்வாகிகள் இந்தப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறும் கோரிக்கையினை முன் வைத்தனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.

 

Copyright © 4649 Mukadu · All rights reserved · designed by Speed IT net