அடிப்படை வசதிகள் இல்லாமையால் அல்லலுறும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள்!
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஆயிரத்து 383 பேர் அன்றாடம் சொல்லொணாத்துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது 414 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 383இற்கும் அதிக மக்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் இங்குள்ள மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைவிட இப்பகுதியில் மாணவர்களுக்கான சீரான கல்வி வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் இன்றியும் தொழில் வாய்ப்புக்களின்றியும் இங்குள்ள மக்கள் அன்றாடம் சொல்லொணாத்துன்பங்கள் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன் தங்களது கிராமத்தின் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.