இலங்கை வருகின்றது சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐ.நா குழு!
சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவினர் இலங்கைக்கான தனது முதல் விஜயத்தை மேற்கொண்டு இவ்வாரம் கொழும்பு வரவுள்ளனர்.
இலங்கை வரும் அவர்கள் எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரையில் தங்கியிருப்பார்கள்.
இதன் போது அமைச்சர்கள் உள்ளிட்ட உரிய அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளனர்.
மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா தலைமையிலான இந்த உபகுழுவில் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த சத்யபூஷன் குப்த் டோமா, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மைக்கிலிடஸ் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜுன் லோபேஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொழும்பில் அவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கடப்பாடுகளுக்கு அமைவாக இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவுவதில் கவனம் செலுத்தும் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.