மின்சார நெருக்கடி: இன்னும் 10 நாட்களுக்கே மின்வெட்டு!
தற்போது அமுலிலுள்ள மின்வெட்டு பிரச்சினை சுமார் 10 நாட்களுக்கே இருக்கும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ருவான் வெலிசாயவில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க அமைச்சர ரவி கருணாநாயக்க ருவான்வெலிசாய பூமியில் மின்சார சிக்கனம் தொடர்பான நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , தற்போது பெரும் நீர்த்தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் வரட்சியின் காரணமாக மின் உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு முன்னரும் இவ்வாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு செயற்படுத்தினார்கள்.
இரவு வேளைகளில் 3600 யுனிட் முதல் 3700யுனிட் வரை மின்சார தேவை இருந்தது. தற்போது இது 3200ஆக குறைவடைந்துள்ளது. இதனையிட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த உக்கிரமமான நெருக்கடி இன்னும் 10தினங்களுக்கு மட்டுமே இருக்கும். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
மீண்டும் இவ்வாறான ஒரு பிரச்சினை ஏற்படாதவாறு இருக்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.இதற்கு நிலையான மின் உற்பத்தி வேலைத்திட்டமொன்று எம்மிடம் இருக்கவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
பல வருடங்களாக மின் உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. வருடாந்தம் 6வீதம் முதல் 7வீதம் வரை மின்சார தேவை அதிகரிக்கிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மின் உற்பத்தியும் அதிகரிப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள மின்சார தேவையை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்தவுள்ளோம்.
அனல் மின் நிலையம் உட்பட ஏனைய மின் நிலையங்கள் ஊடாக சுமார் 500 முதல் 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய கூட்டமைப்புக்குள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.