2020 – 2025 காலப்பகுதியில் எரிவாயு உற்பத்தி.
2020- 2025 காலகட்டத்தில் நாட்டில் முதலாவது எரிவாயு உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானிய நிறுவனம் ஒன்று மன்னாரில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கையை வெகுவிரைவில் உருவாக்க முடியுமென்றும் சபையில் தெரிவித்தார்.
இயற்கை வாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும என்ற நம்பிக்கையை மன்னாரின் அகழ்வு பணிகள் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், 12நிறுவனங்கள் இதற்கான செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதுடன் 2020ல் உற்பத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்தாகும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வள அபிவிருத்தி நெடுஞ்சாலைகள், மின்சக்தி எரிசக்தி அமைச்சர்களின் நிதியொதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; எரிபொருள் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பில் நாம் முக்கியமான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக போதுமானளவு எரிபொருளை களஞ்சியப்படுத்தும் வசதிகள் எமக்குக் கிடையாது. தற்போதுள்ள வசதிகளுக்கேற்ப 10 நாட்களுக்குக்கு போதுமான எரிபொருளை களஞ்சியப்படுத்தவே வசதியுள்ளது.
இதற்கிணங்க 15,000கன மீற்றர் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தற்கான எண்ணெய் தாங்கியொன்றும் மேலும் 5000 கன மீற்றர் கொள்ளளவு தாங்கிகளையும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாய்த் தொகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன் 12அங்குல புதிய குழாய்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் தற்போது செலவிடப்படும் 7 நாட்களுக்குப் பதிலாக 3 நாட்களில் அதனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் பல மில்லியன் டொலர்களை மீதப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.