சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 11 பேர் கைது!

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 11 பேர் கைது!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் புத்தளத்தில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 11 பேரும் பிரான்ஸ் செல்வதற்காக புத்தளத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் (01) புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நாளை (03) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 10, 12 வயதுடைய இரு சிறுவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் 26 தொடக்கம் 40 வயதுடைய சந்தேகநபர்கள் உள்ளிட்ட 11 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம், முந்தளம் உடப்பு பகுதிக்கு சென்று உடப்புவிலிருந்து கடல் வழியாக ட்ரோலர் படகின் மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்லும் நோக்கில் புத்தளம் நகரில் தங்கியிருப்பதாக, புத்தளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் புத்தளம் தலைமையக பொலிஸாரினால் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45/1 பிரிவின் (அ) இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதன் காரணமாக, தன்னால் இதுதொடர்பில் பிணை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து, விசாரணைகள் நிறைவு செய்யும்வரை சந்தேக நபர்களை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் பிரிவு பொலிஸிற்கு பொறுப்பான அத்தியட்சகர் ஜே.ஏ. சந்திரசேனவின் மேற்பார்வையின் கீழ் சந்தேகநபர்கள் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Copyright © 5992 Mukadu · All rights reserved · designed by Speed IT net