புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கு வாய்ப்பு!

புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கு வாய்ப்பு!

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டே புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும், கல்வியைப்போன்று, எதிர்காலத்திற்காகவும் மாணவர்களை வழிநடத்த வேண்டியது அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடவத்த மகா மாய வித்தியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது மாணவர்கள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக எட்டாம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்தி தமது திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத்துறையின் மூலம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கற்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலைகளை வகைப்படுத்தி அப்பாடசாலைகளுக்கான விசேட பாடத் துறைகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

புத்தாக்கம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு பொருத்தமான கல்வி முறைகளுக்கு மாணவர்களை வழிகாட்டுவதுடன், பட்டப் படிப்பை முடித்து தொழில் தேடி வீதிகளில் போராட்டங்களை நடத்தும் யுகத்திற்கு முடிவு கட்டுவது தனது நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Copyright © 4238 Mukadu · All rights reserved · designed by Speed IT net