கோட்டாவால் மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கோட்டா அரசியலுக்குள் வந்தால் மஹிந்தவின் அரசியலில் தளம்பல் ஏற்பட்டு அதன் பின்னர் அரசியல் கேந்திர நிலையமாக கோட்டாபய ராஜபக்ஷ மாறிவிடுவார் என கூறிய அவர், இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாவை ஒரு சமயம் தூக்கி வைத்திருப்பதாகவும் அதன் பின்னர் கீழே எறிகின்றார் எனவும் தெரிவித்தார்.
எனவேதான் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாவை வேட்பாளராக நிறுத்த போவதில்லை என்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோட்டாவை வேட்பாளராக நிறுத்த எவரெவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஷிரந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.