மைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்!
பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர் நீதிமன்றில் விளக்கம் கோர முற்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறு விளக்கம் கோர முற்படுவதானது முற்றிலும் அறிவிலித்தனமான செயற்பாடு என அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றில் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதியின் தரப்பினர்கள் முற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து பேசியுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே உயர் நீதிமன்றில் விளக்கம் கோரியுள்ள நிலையில், நீதிமன்றமும் தனது விளக்கத்தை அளித்துள்ளது.
இவ்வாறான நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றில் விளக்கம் கோர நினைப்பது முற்றிலும் அறிவிலித்தனமான செயற்பாடாகும். முன்னர் சொன்ன விடயத்தை மீண்டும் கேட்க வேண்டுமா?
மீண்டும் இவ்வாறு உயர் நீதிமன்றம் சென்று விளக்கம் கோர நினைப்பதானது, மூக்குடைபடும் செயற்பாடாகவே இது இருக்கப் போகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.