எந்த நேரத்திலும் தூக்கிலிடலாம்!

எந்த நேரத்திலும் தூக்கிலிடலாம்!

இலங்கையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபை தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“43 வருடகாலத்திற்குப் பின்னர் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தூக்கிலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் கைதிகளின் விபரங்கள், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதிகள் குறித்து முற்றுமுழுதான இரகசியத்தன்மையே காணப்படுகின்றது.

அந்தக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய வரலாறு தொடர்பிலும் எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் நேர்மையான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா, தங்கள் சார்பில் வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்களா,

மன்னிப்புக்கோருவது தொடர்பில் அர்த்தமுள்ள செயன்முறை ஒன்றில் அவர்களால் ஈடுபடக்கூடியதாக இருந்ததா உள்ளிட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் எவையுமில்லை.

இறுதியாக 1976ம் ஆண்டிலேயே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு மறுதலையாக்கப்படும் வருடமாக 2019 இருக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதிக்கான மகஜரை ஒவ்வொருவரும் தாங்கள் சுயமாகவே எழுதி அனுப்பிவைக்க முடியும் என்றும், அல்லது மன்னிப்புச்சபையின் இணையத்தளப் பக்கத்திலுள்ள மாதிரிக் கடிதத்தைப் பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 0241 Mukadu · All rights reserved · designed by Speed IT net