இலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி!
இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் பல இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் சதியாகவே இருக்ககூடுமென சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சீமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமெனவும் பெரும்பாலான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வெளியாகிய தகவல்கள் மீள முடியாத துயரை தொடர்ந்து தருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளாமல் இலங்கை அரசு அமைதியாக இருந்தமைக்கு காரணம் புரியவில்லை.
மேலும் இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் இவ்வாறு பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது அரசியல் சதித்திட்டமாகவே இருக்ககூடுமென தோன்றுகின்றது.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தினை மீண்டும் ஞாபகப்படுத்தியதை போன்று இருக்கின்றது.
இவ்வாறு கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என சீமான் தெரிவித்துள்ளார்.