சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் அந்த அறிக்கையில் தெரியவருவதாவது,

“கடந்த 10 ஆண்டுகளாக அமைதியை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த இலங்கையில் மீண்டும் பயங்கரவாத சக்திகளின் செயற்பாடு அண்டை நாடான இந்தியாவில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த தொடர் குண்டு வெடிப்பில் இறந்த அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தவகையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தமிழர்களிடையே மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை அரசோடு தங்களது உரிமைகளை பெறுவதற்காக தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்தசூழலில் மத பின்னணி கொண்ட இத்தகைய தொடர் குண்டு வெடிப்புகள் தங்களது பேச்சுவார்த்தையை சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகின்றனர்.

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு நிலவுகிற கள நிலவரத்தை அறியவும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடையே ஏற்பட்டிருக்கிற அச்சத்தையும், பயத்தையும் நேரில் அறிந்து உரிய தீர்வுகளை காண சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும்.

இத்தகைய பதற்றமான சூழலில் அண்டை நாடான இந்தியா வெறும் அனுதாப செய்தியை வெளியிடுவதோடு நின்று விடாமல் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்கிற சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் அமையும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net