ஐ.எஸ் தீவிரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்புகளினால் அதிர்ந்து போயுள்ள இலங்கை!

ஐ.எஸ் தீவிரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்புகளினால் அதிர்ந்து போயுள்ள இலங்கை!

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான முகவர் நிலையம் யுனிசெப் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இதுவரையில் 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

நியுசிலாந்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  நாடாளுமன்றத்தில் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டு ஒரு சில மணித்தியாலங்களிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்த காணொளி ஒன்றினையும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களின் பெயர் விபரங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது கொழும்பின் சில முக்கிய பகுதிகளில் லொறி, வான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகளுடன் சந்தேக நபர்கள் உலாவுவதாகவும், இதன்காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதுவரையில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப் பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினமும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹப்புத்தள – மாத்திரிபுர பகுதியிலிலுள்ள வீடு ஒன்றிற்கு அருகிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் கண்டனம் வெளியிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

-பெனிற்லஸ்-

Copyright © 9866 Mukadu · All rights reserved · designed by Speed IT net