தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருந்ததுடன், பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்றும் நேற்று முன்தினமும் உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
அதன் பின்னரும் பல பகுதிகளில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் இரவு முதல் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததோடு நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.