முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல!

முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்தை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் குண்டு வெடிப்புக்களையடுத்து, (செவ்வாய்க்கிழமை) மாலை விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் கூறினார்.

அவர் தெரிவிக்கையில்,

“எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே.

ஆகையினால் நாட்டினுள் சிங்கள, முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.

ஆகையால் புதிய தொழிநுட்பம், உயரிய தொழிநுட்பம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்களின் உத்திகளையும் உபயோகப்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான மிக உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் ஆலோசனைகளையும் வளங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பினை நமது தாய் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கியெறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்.

இத்தருணத்தில் அரசியல் கட்சி பேதங்களின்றி மத, இன பேதமின்றி செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இனவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன? என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இனவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவும் ஆற்றல்மிக்க நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

ஆகையால் இந்த பாரதூரமான பயங்கரவாத அமைப்பு இலங்கையை இவ்வாறு தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் இருந்துவந்த சமாதானமான சூழ்நிலையை சிதைத்து நாட்டு மக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி குறிப்பாக ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் ஒரு குழுவினருடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்தை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.

ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது இத்தருணத்தில் தகுந்ததல்ல என்பதே எனது நம்பிக்கையாகும். ஆகையால் அவ்வாறு செயற்பட வேண்டாம் என மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் செய்யாத அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வட்ட மேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் அரசின் எதிர்கால திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் எதிர்பார்க்கின்றேன்.

அதேபோன்று பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து மதத் தலைவர்களையும் இந்த நாட்டின் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைத்து ஒரே மேசையில் அவர்களுடன் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி சமூகமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே அரசியல் இலாபம் கருதி செயற்படாது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இன்று இந்த நாட்டில் வாழும் மக்களைப் போன்றே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எமது இந்த முடிவிற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 7585 Mukadu · All rights reserved · designed by Speed IT net