கொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன?
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணைகளில் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார். அப்பெண்ணே தெமட்டகொடை சொகுசு வீட்டில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் அல்லது சஹ்ரான் ஹாசிம் என்பவர் இதன்போது தற்கொலை குண்டுதரியாக செயற்பட்டு உயிரிழந்தாரா இல்லையா என்பது மட்டும் மாலை வரை உறுதி செய்ய முடியாதிருந்ததாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரின் ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு 32 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதனைவிட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வரகாபொலை சோதனையும் சிக்கிய வேன், மோட்டார் சைக்கிளும்
இதனிடையே நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விஷேட சுற்றிவளைப்பொன்று வரகாபொலை பகுதியில் நடத்தப்பட்டது.
கேகாலை பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாமின் பொலிஸ் பரிசோதகர் ரோஹன குமார தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பினை நடத்தினர்.
வரகாபொலை – அங்குருவல வீதியின் மஸ்ஜித் மாவத்தை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது சந்தேகத்துக்கு இடமானது என அறிவித்து தேடப்பட்டு வந்த எஸ்.ஜி.பி.எச். 3779 எனும் கே.டி.எச். ரக வேன் ஒன்றும் 144 – 2446 எனும் இலக்கத்தை உடைய செம்மஞ்சள் நிற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.முதலில் மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிசார் பின்னர் வேனைக் கைப்பற்றினர்.
இதன்போது அங்கு வீட்டில் தங்கியிருந்த மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் என்பவரையும் மற்றொருவரையும் பொலிசார் கைதுசெய்தனர்.
அதன்பின்னர் அவர்களது வீட்டை சோதனை செய்த பொலிசார் அங்கிருந்து 4 வோக்கி டோக்கிகளை கைப்பற்றினர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, 47 வயதான மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் கே.டி.எச். ரக வேனின் சாரதியாக செயற்பட்டுள்ளமையும் அவர், மாவனெல்லை – ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைய கடந்த இரு வாரங்களாக டுபாயில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு குழுவை நாடு முழுதும் அழைத்துச் சென்றிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த குறித்த மெளலவியையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அளுத்கம, பேருவளை, கட்டான பகுதிகளிலும் கைதுகள்
இதேநேரம் நேற்று முன்தினம் இரவோடிரவாக மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அளுத்கம பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் கலந்துரையாடலில் இருந்த ஆறு பேர் அளுத்கம பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பேருவளையில் 5 பேரும் , நீர்கொழும்பு – கட்டான பகுதியில் நல்வரும் கைதுசெய்யப்பட்டனர்.
மாதம்பையில் கைதான எகிப்து பிரஜை
இதேநேரம் மாதம்பே பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையிலிருந்து எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாவோ கடவுச்சீட்டோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த தகவல்களுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளுக்கு குறித்த சந்தேகநபர் பயிற்சிகளை வழங்கியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் முகம், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் முகத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எகிப்து நாட்டை சேர்ந்த 44 வயதான குறித்த நபரை நாளை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வத்தளையில் கைதான புர்கா அணிந்து சென்ற ஆண்
இதேநேரம் வத்தளையில் புர் கா அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஆண் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில், அவரை மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குண்டு தயாரிக்கப்பட்டது செப்பு தொழிற்சாலையிலா?
இதேநேரம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு தேவையான வெடிபொருட்கள், குண்டுகள் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் அவிஸ்ஸாவளை வீதியில் இலக்கம் 111/ஏ எனும் முகவரியில் அமைந்துள்ள செப்பு தயரைப்பு தொழிற்சாலையில் தயரைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
அத்தொழிற்சாலை ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சான் என்பவருக்கும் தெமட்டகொடையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பெண்ணுக்கும் சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில் அங்கு தொழில் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ளனர்.
இந் நிலையிலேயே சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியும் அத்தொழிற்சாலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு குண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
தற்கொலைதாரிகள் தொடர்பிலான மேலதிக தகவல்
தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்த, நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது. சிலருக்கு சட்டம் தொடர்பில் பட்டம் உள்ளது. தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்தவர்.
பின்னர் முதுகலை படிப்பை அவுஸ்திரேலியவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக கண்டறிந்துள்ளோம் என பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கூறினார்.
குண்டு புரளியால் அச்சத்தில் மக்கள்
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள சவோய் திரையரங்கிற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது.
காலை 9.30 மணியளவில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்ததுடன், சவோய் திரையரங்கிற்கு அருகில் உள்ள அனைவரையும் அப்புறப்படுத்தி எக்ஸ் கதிர் வீச்சு ஊடாக மோட்டர் சைக்கிளை முதலில் சோதனைச் செய்தனர்.
எனினும் அந்த மோட்டார் சைக்கிளின் இருக்கையை திறந்து சோதனைச் செய்ய முடியாமல் போகவே அந்த இருக்கையை திறக்க பொலிசார் பாதுகாப்பாக வெடிப்பு முறையைக் கையாண்டனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஆராய்ந்த போதும் அதில் எந்த வெடிபொருட்களும் இருக்கவில்லை.
அத்துடன் களுபோவிலை வைத்தியசாலையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் அங்கு சற்று அச்ச நிலைமை ஒன்று இன்று ஏற்பட்டது. கொஹுவளை பொலிசாருக்கு அது குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேநேரம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் 3 ஆம் மாடியில் இருந்த சந்தேகத்துக்கு இடமான பொதியால் பதற்றம் ஏற்பட்டது.
எனினும் இதன்போது முப்படை, பொலிஸ் விஷேட அதிரடிப் படை ஸ்தலத்துக்கு சென்று நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. குறித்த பொதியை சோதனைச் செய்தபோது அதில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கவில்லை.
மேலும் நேற்று பிற்பகல் புறக்கோட்டை பொலிஸ் பிரிவின் ஐந்து லாம்பு சந்தி, முதலாம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதியிலும் சந்தேகத்துக்கு இடமான மூன்று மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அச்சத்துடன் கூடிய சூழல் உருவானது.
பொலிஸ் தலைமையகம் மற்றும் முதலாம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இருந்த மோட்டர் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்ட பின்னர் அதில் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
எனினும் ஐந்துலாம்பு சந்தி பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் பரிய சந்தேகம் எழுந்த நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது.
எனினும் அந்த மோட்டார் சைக்கிளில் எந்த வெடிபொருட்களும் காணப்படவில்லை. இந் நிலையில் மோட்டார் சைக்கிளின் பதிவை மையப்படுத்தி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட கட்டான தேவாலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த சந்தேகத்துக்கு இடமான பொதியால் இன்று பதற்றம் ஏற்பட்டது.
ஹோட்டல் அதிகாரிகளின் தகவலால் அங்கு சென்ற விமானப்படையினர் அந்த பொதியை பாதுகாப்பாக வெடிக்க வைத்து திறந்த நிலையில், அதிலும் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை.
இந் நிலையில் அப் பொதியின் உரிமையாளர் பின்னர் அங்கு வருகை தந்துள்ளதுடன் தான் தவறுதலாக மறந்து பொதியை வைத்துவிட்டு சென்றதாக கூறி அப்பொதியை பொறுப்பேற்றார்.