இலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு? – இந்தியா அறிவிப்பு
கோவையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கைதான ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி பி.டி.ஐ செய்திச் சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட கோவையை சேர்ந்த மொஹமட் ஆசிப், ஜாபர் சாதிக் அலி, சாகுல் அமீட் ஆகியோரை இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த செப்டெம்பரில் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட காணாளிக் காட்சிகளில், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தேசிய தௌகிக் ஜமாத் அமைப்பின் தலைவர் அசீம் தொடர்பான காணொளியும் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த காணொளிகளில் இருந்த தகவல்கள் மற்றும் கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளமை குறித்த விடயங்களை அறிந்தாக இந்திய உளவுப் பிரிவு கூறியுள்ளது.
இந்திய உளவுப் பிரிவின் இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டே, இலங்கையை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எச்சரித்தாகவும் பி.டி.ஐ செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த எச்சரிக்கையை இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் காரணமாகவே இவ்வாறான தாக்குதலுக்கு இலங்கை உள்ளானதாக இந்திய உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி பி.டி.ஐ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.