எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குறித்த விசேட கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த விசேட கூட்டத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பி ரிதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி சார்பில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர், அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 104 பாடசாலைகளில் 32 800 மாணவர்கள் கல்வி கற்ற வருகின்றனர்.
பாடசாலைகள் திறந்து விடப்பட்டதன் பின்னர் மாணவர்கள் அச்சமின்றி கல்வினை தொடரும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, அங்கு கருத்து தெரிவித்த 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குறிப்பிடுகையில்,
அச்சப்படவேண்டியதில்லை. அவதானமாக இருந்தால் போதும். பாடசாலைகள் 29ம் திகதி ஆரம்பமாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பாடசாலைகளில் சோதனைகளை முன்னெடுக்க உள்ளோம். ஏனைய பாடசாலைகளிலும் இவ்வாறு செய்வோம்.
தொடர்ந்தும் குண்டு செயலிழக்கும் பிரிவினரையும் அழைத்து விசேட சோதனைகளை முன்னெடுப்போம். அதன் பின்னர் படையினர் பாடசாலைகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
மாணவர்களின் புத்தகபைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்வதற்கு பெற்றோர் உதவவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களை புத்தக பைகளை கொண்டு வரவேண்டாம் என கூற முடியாது. அவர்கள் அதிகம் புத்தகங்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்,இது ஓர் சாதாரணவிடயம். இதற்காக அச்சப்படவேண்டியதில்லை.
மாணவர்கள் புத்தக பைபகளாக உரு தெரிய கூடிய பைகளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 29ம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், சில பாதுகாப்பு செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தோம்.
இந்த கலந்துரையாடலில் அதிபர்களிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.