விசேட நடவடிக்கைகளில் 78 பேர் கைது!

விசேட நடவடிக்கைகளில் 78 பேர் கைது! 15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் தீவிர விசாரணை

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் தலைமையில் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட நடவடிக்கைகளில் இதுவரை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 78 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்த விதம், அதற்காக குண்டுதாரிகள் ஒன்றுசேர்ந்த விதம் அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோர் என அனைவர் குறித்தும் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதன்படி அவர்களில் பலரைக் கைது செய்துள்ளதாகவும் ருவான் குணசேகர கூறினார்.

இதனிடையே, தற்கொலை குண்டுதாரிகள் மறைந்திருக்க பயன்படுத்திய 5 பாதுகாப்பு இல்லங்களையும் சி.ஐ.டி.யினர் கண்டுபிடித்துள்ளனர். பாணந்துறை – சரிக்காமுல்ல, தெஹிவளை, கொள்ளுபிட்டி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 33 பேரையும், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஒரு பெண் உள்ளிட்ட நால்வரையும் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 1681 Mukadu · All rights reserved · designed by Speed IT net