தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது!

தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பொய்யாக தகவல் வழங்கிய சந்தேகநபரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முன்னாள் இராணுவ வீரர் சுந்தரமூர்த்தி என்பவரையே பெங்களூர் ஊரக பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

பெங்களூர் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பை நேற்று முன்தினம் அவர் ஏற்படுத்தி, “தென் மாநிலங்களிலுள்ள முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறவுள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 19தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தகவலின் உண்மை தன்மையை அறியும் பொருட்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநில பொலிஸ் நிலையத்துக்கு கர்நாடக டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

பின்னர் தொலைபேசியில் கூறப்பட்ட தகவலுக்கமைய இராமேஸ்வரம் மாவட்டம் முழுவதிலும் இரண்டு நாட்கள் தொடர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதேபோன்று சேலம் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெங்களூர் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய முன்னாள் இராணுவ வீரர் சுந்தரமூர்த்தியை பெங்களூர் ஊரக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு மற்றும் தீவிரவாதத் தாக்குதல் மிரட்டல் வெறும் போலியென பெங்களூர், ஊரக பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net