தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்!
அரசியல் பலத்தின் ஊடாகவே தீவிரவாதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மனிதர்களை அழிக்க வேண்டுமென்ற கொடூர சிந்தனையோடு மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த தாக்குதல் சம்பவம் முஸ்ஸீம் தீவிரவாத அமைப்புக்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதற்காக ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளன.
இவர்கள் மனித வெடி குண்டுகளாக மாறி மக்கள் மத்தியில் வெடிக்கடிச் செய்து அவர்களை கொலை செய்து கொண்டிருக்கின்றனர். குறித்த சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
அந்தவகையில் நாட்டினுடைய புலனாய்வுப் பிரிவின் பலவீனமும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்.
அதேபோன்று மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள். இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆகையால் உண்மையாகவே மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர்கள்தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.
அதனை விடுத்து நாங்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசாங்கத்தை கொண்டு செல்பவர்களாக இருந்தால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற அரசியல் வாதிகள் ஒரு சில பிழைகளை செய்கின்றபோது அரசாங்கம் அதனை தட்டிக் கேட்பதில்லை.
இவ்வாறு சிறு தவறுகளை தட்டிக்கேட்காமல் இருந்தமையினாலேயே இன்று இவ்வளவு படுகொலைகள் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசியல் பலத்தின் மூலமே பயங்கரவாதிகள் வளர்ந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது.
ஆனால் இன்று அரசியல் தலைவர்களை அல்லது அமைச்சர்களை இராணுவ புலனாய்வு அல்லது தேசிய பாதுகாப்புச் சபை விசாரணைகளை மேற்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.
அவர்கள் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை. நாட்டின் முக்கிய கட்சிகளின் இலக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலாகும்.
இவர்களுக்கு நாட்டினுடைய பாதுகாப்பு அல்லது மக்களினுடைய பாதுகாப்பு குறித்த எந்ததொரு சிந்தனையும் இல்லை. இன்று மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.
இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கம் தவறு செய்கின்றவர்களை தொடர்ந்தும் பதவிகளில் வைத்திருப்பதும் அவர்களை ஊக்குவிக்கின்றமையும் தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம்” என சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.