தொடர் குண்டு வெடிப்புகள்: கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்?
இலங்கையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னர் கோவை வந்து சென்ற இலங்கையர் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தீவிர விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
ஆகையால், இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் இவருக்கும் தொடர்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் இலங்கையை சேர்ந்தவர் எதற்காக கோவை வந்தார், அவருடன் வேறு யாரும் வந்திருந்தனரா, அவரது பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர், யார் யாரையெல்லாம் சந்தித்தார், கோவையைச் சேர்ந்தவர்கள் யார் என்பது தொடர்பில் இரகசியமான முறையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் உட்பட 6பேரிடம் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருந்த கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரணையை நடத்தியுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் பரிமாறிக்கொண்ட விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்ட பின்னர் அவர்களை திருப்பி அனுப்பியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களுடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.