தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த மேதின கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த மே தின கூட்டத்தில் தொழில் சார் சங்கங்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ் சிறிதரன், வட மாகாண சபை தவிசாளர், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மே தின சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மே தின உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் மேதின பிரகடன உரையை முன்னால் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வாசித்தார்.
யாழ் மாநகர மேஜர் ஆனோல்ட் உரையாற்றுகையில்,
மே தினம் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது தொடர்பில் குறிப்பிட்டார். இலங்கையில் தொழிலாளர்கள் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தினரால் சுரண்டப்படுகின்றார்கள் என்பது தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாண சபை தவிசாயர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிடுகையில்,
இலங்கையில் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தினர் தொழிலாளர்களை சுரண்டுகின்றனர் என்பது தொடர்பில் அவர் கரு்தது தெரிவித்தார்.
நாட்டினுடைய வளர்ச்சிக்கு எமது பங்களிப்பு மிகவும் அவசியம். வடமாகாணத்தை பொறுத்தவரையில் நாட்டின் வளர்ச்சிக்காக 4 வீதமான பங்களிப்பையே நாம் செய்கின்றோம்.
இதேவேளை மேல்மாகாணம் கிட்டத்தட்ட 48 வீத பங்களிப்பை செய்கின்றது. ஆகவே அங்கு அவர்களின் உற்பத்தி வளர்ச்சிகள் பாரிய அளவில் வளர்ச்சியடைகின்றபோது, எங்களுடைய வளர்ச்சி இந்த நான்கு வீதத்திற்குள்ளுயே மட்டுப்படுத்தப்படுவதாக அவர் இதன்புாது குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் அண்மையில் இடம்பெற்றது இஸ்லாமியர்களால் மேற்கொ்ள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் என சாதாரணமாக எண்ணிவிட முடியாது.
அது தமிழ் மக்கள் மீதான இரண்டாவது இன அழிப்பு எனவே நான் கருதுகின்றேன். சரியாக 10 வருடங்களின் பின்னர் இவ்வாறான ஏப்ரல், மே மாதத்தில் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 வருடங்களிற்கு முன்னர் இவ்வாறான இன அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்டிருந்தது. எனவே நாம் இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது.
அந்த தீவிரவாத தாக்குதலில் எந்த சிங்கள மகனும் கொல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ் கிறிஸ்தவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே பார்க்கவேண்டுமே அல்லாமல் சாதாரணமாக நாம் எண்ணி விட்டுவிட முடியாது.
அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே சோதனைகளும், மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
குண்டு வெடித்த பகுதிகளில் இவ்வாறு சோதனைகள் கடுமையாக மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் 1 லட்சம் படையினரை வைத்துக்கொண்டு இவ்வாறு தமிழ் மக்களை நசுக்கும் வகையில் அரசு செயற்படுகின்றது என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில்,
குண்டு தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள், சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற்று நாடாளுமன்றில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தும் சாத்தியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல், ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களால் இவை சாத்தியமற்று போனதாக அவரது உரை தொடர்ந்தது.