சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது!

சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது!

தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா – கேராளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் செயற்பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு தடை செய்யப்பட்டதுடன், அதன் சொத்துகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த தற்கொலை தாக்குதலை தொடர்ந்து பிராந்திய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தீவிர தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சாஹ்ரான் ஹாசிம் தமிழகத்திலும், கேரளாவிலும் பலருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த சிலர் சஹ்ரான் ஹசிமின் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில், கேரளாவில் பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சஹ்ரான் ஹசிமின் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் உள்ள முக்கிய நகரில் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டதாக” இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1141 Mukadu · All rights reserved · designed by Speed IT net