அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்பந்தமான விசாரணைகளுக்கு தான் தடையேற்படுத்துவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுடன் தனக்கு எந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு கிடையாது எனவும், தான் பயங்கரவாதத்திற்கு உதவும் நபர் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை தொகுதியில் பாதுகாப்பு தரப்பினர் நடத்தும் விசாரணைகளுக்கு தான் அழுத்தம் கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் ராஜித,
தான் எந்த அழுத்தங்களை கொடுக்கவில்லை எனவும், இலங்கையில் உள்ள எந்த பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக கேட்டறிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
எந்த வகையிலும் குற்றவாளிகளுக்காக தான் குரல் கொடுப்பதில்லை எனவும், குற்றவாளிகளை காப்பாற்ற தான் அழுத்தங்களை கொடுத்தாக உறுதிப்படுத்தினால், அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கமை தர்கா நகரில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தானே பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியதாகவும், பேருவளையில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் வீடொன்றை வாடகைக்கு பெற வந்த சந்தேகத்திற்கிடமான நபர்கள் பற்றி தானே பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.