இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.

அதன்பின்னர் அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோது இருவரையும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.

மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என்ற விதி தேவையற்றது என பொலிஸார் மறுத்துரைத்தனர்.

இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்திலெடுத்த நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா? என்ற தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net