இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க இடமளிக்கக்கூடாது!

இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க இடமளிக்கக்கூடாது!

இலங்கையர் என்ற அடையாளம் பயங்கரவாதிகளால் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்தார்.

எமது நாட்டில் பௌத்த மதத்தில் மாத்திரமன்றி, ஏனைய மதங்களிலும் இலங்கையருக்குரிய தனித்துவ அடையாளம் இருக்கின்றது.

இந்நாட்டின் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களில் வேரூன்றியிருக்கும் இலங்கைக்கான தனித்துவ அடையாளத்தின் காரணமாக எம் மனைவருக்கும் பொதுவானதும், தனித்துவமானதுமான இலங்கையர் என்ற அடையாளம் உருவாகியிருக்கிறது.

அந்த அடையாளம் பயங்கரவாதிகளால் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கண்டியில் அஸ்கிரிய, மல்வத்துபீட மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வித்யாசாகர மகா பிரிவெனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்துபீடத்தின் மகாநாயக்க தேரர் திம்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு அஸ்கிரியபீடத்தின் மாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.

தொடர்ந்து ராமஞ்ஞ மகாநிகாயவின் மகாநாயக்க தேரர் பிரேமசிறி தேரரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

மகாநாயக்க தேரர்களுடன் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்து பிரதமர் விரிவாகக் கலந்துரையாடினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு மகாநாயக்க தேரர்களிடம் அழைப்புவிடுத்தேன்.

அதன்போது மகாநாயக்க தேரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளால் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் அமைதியும், சமாதானமும் பேணப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலேயே இன்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தேன்.

அதேபோன்று நாட்டில் மீண்டும் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியதுடன், தற்போது வரையில் நாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் இதன்போது தெளிவுபடுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net