தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு ரிஷாட்!
குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் குறித்து உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி இந்த கொடிய பயங்கரவாதத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி இந்த குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு துன்பத்திலிருக்கின்ற அப்பாவி மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்குகொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.
என்னைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நான் நாடவுள்ளேன். அவருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துளேன்.
என்னிடம் 3500 ஏக்கர் காணி இருந்தால் அதனை கண்டுபிடிப்பது கடினமா என கேட்டுக்கொள்கின்றேன்.
52 நாட்கள் அரசியல் பிரளயத்தின்போது எனது உதவியை நாடி அதற்கு நான் உடன்படாத காரணத்தால் என் மீது இந்த பழியை அவர் சுமத்துகின்றார். என் மீதான குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன்.
எனது சொத்துக்கள் தொடர்பில் நான் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி செயலகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வருகின்றேன். நீங்கள் அதனை தாராளமாக பரிசீலிக்கலாம். நான் இஸ்லாமியன்.
அதன் வழிமுறைப்படி வாழ்க்கை நடத்துபவன் நான். ஒரு சதமேனும் தவறான வழியில் உழைக்கவில்லை. நேர்மையாக உழைத்து வாழ்பவன். நான் முறைகேடாக உழைத்தால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க உங்களால் முடியும்.
பயத்துடனும் சோகத்துடனும் இந்த நாட்டு மக்கள் இருக்கும்போது அரசியலுக்காக இந்த வீண்பழிகளை என் மீது சுமத்துவது தவறானது” என மேலும் தெரிவித்துள்ளார்.