விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி!

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அஜந்தன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சூத்திரதாரியான சர்ஹானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணித்தார்.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.

Copyright © 7154 Mukadu · All rights reserved · designed by Speed IT net