ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோட்டாவிற்கும் தொடர்பா?

ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோட்டாவிற்கும் தொடர்பா?

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும் இதனை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். தனக்கும் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏதும் கிடையாது என்றும் அவரது திருமணத்தில் ஒரு விருந்தினராக பங்கேற்றேன் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் தோன்றியுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபாய் பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து இந்த விடயம் குறித்து விசாரிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதி அளித்திருந்தார்.

Copyright © 5036 Mukadu · All rights reserved · designed by Speed IT net